குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்தது.
பாக்கிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு அகதிகளாக வந்துள்ள இந்து, சீக்கியர் உள்ளிட்டோருக்கு குடியுரிமை அளிக்கும் வகையில், குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்புகளில் இருந்தும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அதே சமயம், இதை எதிர்த்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது.