ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கம் – மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து நீக்கப்படுவதாக மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் வழங்கி இருப்பதால், மாநில அந்தஸ்தை காஷ்மீர் இழக்கிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370-ஐ நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்தார். முன்னதாக நாடாளுமன்றம் கூடியதும், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, காஷ்மீர் விவகாரம் தொடர்பான மசோதா தாக்கல் செய்த பின்னர் அதன் மீதான விவாதம் நடைபெறும் என அறிவித்தார்.

இதனை ஏற்க மறுத்த எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் அமித் ஷா 370 சட்ட பிரிவு நீக்கப்படுவதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதனை நீக்குவதன் மூலம் பிற மாநிலத்தவர்கள் ஜம்மு காஷ்மீரில், நிலங்கள் வாங்குவதற்கு உரிமை அளிக்கப்படும். மேலும் காஷ்மீருக்கான தனி கொடி, தனி அரசியல் அமைப்பு ஆகியவை நீக்கப்பட்டுள்ளது.

இந்த சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் பகுதி, அதிக மக்கள் தொகையை கொண்டுள்ளதால் அதனை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, சட்டமன்றம் இல்லாத தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல் எல்லை தாண்டிய தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் பகுதி, சட்ட பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version