நாளை நடைபெறும் 2ம் கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில், தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட வாக்குப்பதிவு நேற்று முன்தினம் 156 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்றது. முதல்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 76.19% வாக்குகள் பதிவாகின. இந்த நிலையில், இரண்டாம் கட்டமாக 158 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 2 ஆயிரத்து 544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 4  ஆயிரத்து 924 கிராம ஊராட்சி தலைவர்கள், 38 ஆயிரத்து 916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில், ஒரு கோடியே 28 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடைபெறும் ஊரக பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

Exit mobile version