4 தொகுதி இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் நான்கு தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதால், தேர்தல் பொருட்களை அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

சூலூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் 19ம் தேதி தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. இந்த 4 தொகுதிகளில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். சூலூர் தொகுதியில் 22 பேர், திருப்பரங்குன்றம் தொகுதியில் 37 பேர், ஓட்டப்பிடாரத்தில் 15 பேர், அரவக்குறிச்சியில் 63 பேர் என மொத்தம் 137 பேர் களத்தில் உள்ளனர். நான்கு தொகுதிகளில் நடைபெற்று வந்த அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.

இந்நிலையில், 4 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதேபோன்று, 13 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தேர்தல் பொருட்களை வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version