கர்ப்பிணிகளுக்கு பணி, பதவி உயர்வு கிடையாது என சுற்றறிக்கை அனுப்பிய விவகாரத்தில் உரிய விளக்கம் அளிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு டெல்லி மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, பெண்களின் கர்ப்பத்தை ஒட்டி வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ஒரு பெண்ணின் கர்ப்ப காலம் 3 மாதங்களைக் கடந்திருந்தால்,
அவர் பாரத ஸ்டேட் வங்கியில் புதிதாகப் பணியமர்த்தப்பட மாட்டார் என்றும் அதேபோல் அவர் மூன்று மாதத்துக்கும் அதிகமான கர்ப்பக்காலத்தில் இருந்தால், பதவி உயர்விலும் பரிசீலிக்கப்படமாட்டார் என்றும் பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.
ஒருவேளை, அவர் பணியில் சேர அத்தனை தகுதியையும் பெற்றிருந்தால், பேறுகாலம் முடிந்த 4 மாதங்களுக்குப் பின்னரே மருத்துவ ரீதியாக பணியில் சேர தகுதியானவராகக் கருதப்படுவார் என்றும் எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.
இந்த நடவடவடிக்கைக்கு பெண்கள் தரப்பில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ள நிலையில், கர்ப்பத்தை அவமதிப்பது தாய்மைக்கு எதிரான குற்றம் என்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே, கர்ப்பிணி ஊழியர்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை வெளியிட்டது குறித்து விளக்கமளிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.