வேலைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் சொல்லியும் மருத்துவ சேவை ஆற்றி கொரோனாவுக்கு கர்ப்பிணி பெண் டாக்டர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் சின்ன மனூரைச் சேர்ந்தவர் சண்முகபிரியா, வயது 32. இவர் மதுரை அனுப்பானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்தார். சண்முகபிரியா 8 மாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் கொரோனா தொற்று காலத்திலும் அவர் வழக்கம்போல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டாக்டர் சண்முக பிரியாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார். இது சக ஊழியர்கள் மத்தியிலும், உறவினர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்ப்பிணியாக இருந்ததால் அரசு வழி காட்டுதல்படி தடுப்பூசியும் போட்டுக் கொள்ளவில்லை. அவரது உடல் நிலையை பொருட்படுத்தாது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு பணியாற்றி உயிரை இழந்துள்ளார்.
8 மாத கர்ப்பிணியாக இருந்ததால் சண்முக பிரியாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள் பற்றாக்குறையாக இருப்பதால் பணிக்கு சென்றே ஆக வேண்டும் என்று சண்முகபிரியா திட்டமாக தெரிவித்ததாக கூறுகின்றனர்.
போரில் மரணம் அடைந்த ராணுவ வீரருக்கு தரும் இறுதி மரியாதையை போல மருத்துவர் சண்முகபிரியாவுக்கும் மரியாதை வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கொரோனா தொற்றால் உயிரிழந்த கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா மறைவுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது ட்விட்டர் பதிவில், மதுரை மாவட்டம் அனுப்பானடி ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரி 8 மாத கர்ப்பிணியான மருத்துவர் சண்முகப்பிரியா கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், மருத்துவர் சண்முகப்பிரியாவை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.