வடகிழக்கு பருவமழைக்கு முன்பே தமிழக அரசு சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பாக, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர், வடகிழக்கு பருவமழைக்கு முன்பே தமிழக அரசு சிறப்பான முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளதாக கூறினார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப் பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், ‘பேரிடர் காலத்திற்கு முன்’, ‘பேரிடரின் போது’, ‘பேரிடர் காலத்திற்கு பின்’ என 3 நிலைகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து, அந்த பகுதிகளில் தமிழக அரசு பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.