திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி, நந்தி எம்பெருமானுக்கு சிறப்பு அபிசேஷகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பிரதோஷ விழாவினையொட்டி, அண்ணாமலையார் ஆலயத்தில், அதிகார நந்தி உள்ளிட்ட 6 நந்திக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மற்றும் வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பிரதோஷ நாயகர் சிறப்பு தீபாராதனைககுப் பின்னர், தங்க கவசம் அணிந்து தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளிய பிரதோஷ நாயகர், அதிகார நந்தி மற்றும் கொடிமரம் நந்திக்கும் காட்சியளித்தார். ஆலயத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படாத நிலையில், பிரதோஷ நிகழ்ச்சிகள் சமூக வலைதளங்களில் நேரலை செய்யப்பட்டது.
இதே போல், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் உள்ள 18 அடி உயர நந்திக்கு சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, நந்தி மண்டபத்திலிருந்து சந்திரசேகர் கௌரி அம்பாள், மரக் கேடயத்தில் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உலா வந்த பின் ராமநாத சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படாததால், பிரதோஷ நிகழ்வில் கோவில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.