கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சியில் திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் ஒன்றிய செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட அதிகார சண்டை, கைக்கலப்பில் முடிந்தது.
உளுந்தூர்பேட்டை அருகே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் தனது மாண்பை மறந்து விட்டு தனது சக கட்சி தொண்டருடன் தெருவில் மல்லுக்கட்டிய சம்பவம் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேந்த நாடு பகுதியில் கொரோனா நிதி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டதை விரும்பாத அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் வசந்தவேல் அவரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொள்ள தொடங்கினர். இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் பலர் திமுக ஆட்சியாளர்களை நொந்து கொண்டு நிவாரண நிதியை வாங்காமலேயே அதிருப்தியுடன் வீட்டிற்கு திரும்பினர்.
இதேபோல், திருப்பூரில் திமுக சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் திமுக முன்னாள் மாமன்ற உறுப்பினர் மசூது தனக்கு கட்சி நிகழ்வுகளில் உரிய மரியாதை வழங்கப்படவில்லை என அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். மேலும் தன்னை தடுக்க முயன்ற கட்சி நிர்வாகிகளை கடுமையாக தாக்கினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு அலுவலகத்தில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுதுறை அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், திமுகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு, மோதலாக மாறியது. அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் இரு தரப்பினரிடையே சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் காவேரிப்பாக்கம் பகுதியில் அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில், நலத்திட்ட உதவிகளை பெற சுமார் 5 மணி நேரமாக பொதுமக்கள் காத்திருந்தனர். இந்நிகழ்ச்சியின் போது, திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ரமணன் என்பவருக்கும், திமுக முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் அரசு விழாவில் திமுகவினர் டிஜிட்டல் பேனர்கள் வைத்தது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி மருத்தாம்பாடி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்படாமல், திமிரி பேரூராட்சி அவைத்தலைவர் ராஜி என்பவரின் வீட்டில் வைத்து வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசின் திட்டத்தின் மூலம் அனைத்து தரப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கக்கூடிய நிவாரண பொருட்கள் மற்றும் நிதியினை தங்களது சொந்த நிதியிலிருந்து வழங்குவது போல் திமுகவினர் வழங்கி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
திருப்பூர் இளங்கோ நகர் நியாய விலை கடையில் தங்களை அழைக்காமல் நிவராண பொருட்களை வழங்கிய பெண் ஊழியரிடம் திமுகவினர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதே போல் புதுப்பாளையம் பகுதியில் நியாய விலை கடை ஊழியரை ஓரமாக அமர வைத்து விட்டு திமுகவினர் கொரோனா நிவாரணத் தொகை மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினர். மேலும் நிவாரண பொருட்கள் வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் திமுகவினர் ஸ்டாலின் புகழ் பாடும் பதாகைகளை வைத்திருப்பது தமிழகம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.