கொரோனா ஊரடங்கு தாக்கத்தினால், கடந்த 6 மாதங்களாக சேலை விற்பனை குறைந்துள்ளதால் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தீபாவளி நெருங்கி வரும் வேளையில் எதிர்பார்த்த ஆர்டர்கள் இல்லாததால் நெசவாளர்களை கவலை அடைந்துள்ளனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள் பெருமளவு இழப்பை சந்தித்துள்ளன. தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதால், உற்பத்தி துறை மெல்ல மெல்ல தனது இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தீபாவளிப் பண்டிகையை மையமாகக் கொண்டு செயல்படும் பட்டாசுத் தொழில், ஆடை உற்பத்தி, நகை பட்டறைகளில் போதிய ஆர்டர்கள் இல்லாததுடன் ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களும் தேக்கமடைந்துள்ளன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. 8000 ஆயிரம் பேர் நேரடியாக சேலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சாயம் பூசுதல், பசை ஒட்டுதல் உள்ளிட்ட மற்ற வேலைகளில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள் ஈடுபட்டுள்ளன. சாதாரணமாக ஒரு நாளைக்கு 500 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை வருமானம் இருந்தது. எனினும் கொரோனா ஊரடங்கால், புதிய ஆர்டர்கள் இல்லாததால் நெசவாளர்களுக்கு பெருமளவு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.