மின் தடைக்கும், மின் வெட்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ள எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு இருந்தால் அதனை திமுக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
சட்டப்பேரவையில், திமுக அமைச்சர்கள் அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், எதிர்கட்சியினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்ய போதிய நேரம் கிடைப்பதில்லை என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சியின் போது எதிர்கட்சியினருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சுட்டிக்காட்டிய அவர், நிதியமைச்சரே 20 நிமிடம் எடுத்துக் கொண்டால், மற்ற உறுப்பினர்களுக்கு எப்படி பேச வாய்ப்பு கிடைக்கும் என கேள்வி எழுப்பினார். இதனைத் தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார், கடந்த 10 ஆண்டுகளாக மின்வெட்டு இல்லாத தமிழ்நாட்டில், கடந்த 3 மாதமாக எங்கு பார்த்தாலும் மின்வெட்டு இருப்பதாக குறிப்பிட்டார். அதிமுக ஆட்சியில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்ததாகவும் அவர் அழுத்தமாக பதிவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மின் தடைக்கும், மின் வெட்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்தார். பெறப்படும் மின்சாரத்தை உரிய முறையில் மக்களுக்கு வழங்க வேண்டுமென கூறிய அவர், தட்டுப்பாடு இருந்தால் அதனை, வெளிப்படையாக திமுக அரசு தெரிவிக்க வேண்டுமென குறிப்பிட்டார்.