பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், மண்பாண்ட தொழில் நலிவடைந்து வருவதாக வேதனை தெரிவிக்கும் மண்பாண்ட தொழிலாளார்கள் தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
தைப்பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசி இட்டு உழவர்களின் வாழ்க்கைக்கு உயிரூட்டும் சூரியனுக்கு பொங்கல் படைத்து வழிபடுவது தமிழர்களின் வாழ்வோடு இணைந்தது.
இத்தகைய திருநாளில் பொங்கல் வைக்க காலகாலமாக நம் முன்னோர்கள் மண்பானையை பயன்படுத்தி வந்தார்கள். நாகரிகம் வளர வளர மண்பானையில் பொங்கலிடுவது இன்று அரிதாகிவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் தற்போது பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம் அடைந்துள்ளது .
பட்டதாரி இளைஞர்களும் பாரம்பரிய தொழிலான மண்பாண்ட தொழிலை செய்வதில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மண்பாண்டங்கள் தொழில் செய்து வருவதில் பெரும் சிக்கலை சந்தித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
காலம் தவறிய வடகிழக்கு பருவ மழையால் ஏரிகளில் மண் எடுக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், எடுத்தும் வரும் மண்ணை பதப்படுத்தி உற்பத்தி செய்வதில் காலதாமதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
ஒருசில மண் பாண்ட தொழிலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கியுள்ளதை போல அனைத்து மண் பாண்ட தொழிலாளர்களுக்கும் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆரணி அருகேயுள்ள குப்பம் கிராமத்தில் பொங்கல்பானை உற்பத்தியில் மண்பாண்ட தொழிலாளர்கள் தீவிரம் காட்டி வரும் நிலையில், கடுமையான பனிப்பொழிவு, வைக்கோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை உயர்வால் இந்த பொங்கல் தங்களுக்கு இனிப்பான பொங்கலாக இருக்காது என கவலை தெரிவிக்கின்றனர்.
மண்பாண்ட தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாக நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்போடு பொங்கல் பானையும் சேர்த்து வழங்கவேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.