உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு ஒத்தி வைப்பு

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்ததையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது. இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி திமுக சார்பில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தொகுதி மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்க வேண்டிய பணிகள் மட்டுமே மீதமுள்ளதாகவும் மாநில தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் மட்டும் தொகுதி மறுவரையறை செய்யவில்லை என்று உச்ச நீதிமன்றம் கருதினால், அந்த மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை ஒத்திவைக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் வாதிட்டது.

இதற்கும் திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைக்க முடியுமா என்று மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க கூறி விசாரணையை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஒத்திவைத்தது.

இதைத்தொடர்ந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 9 மாவட்டங்களை தவிர பிற இடங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தயார் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதையடுத்து, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது. இந்த வழக்கு விசாரணையை நேரில் பார்வையிட தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.

Exit mobile version