இந்திய விண்வெளி ஆய்வு வரலாற்றின் புதிய சகாப்தமாக பார்க்கப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம் விண்ணில் ஏவப்படுவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணி 51 நிமிடங்களுக்கு ஏவப்படுவதாக இருந்த சந்திரயான் – 2 பயணம் ஏன் தள்ளிவைக்கப்பட்டது என்பதை பார்க்கலாம்.
நிலவில் தண்ணீருக்கான மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்ததன் மூலம் உலகையே திரும்பிப்பார்க்க வைத்து வரலாறு படைத்தது இந்தியாவின் சந்திரயான் – 1 விண்கலம். அந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாக இன்று அதிகாலை 2.51-க்கு சந்திரயான் – 2 விண்கலம், GSLV மார்க்-3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட இருந்தது. அதனுடன் நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்யும் விக்ரம் என்ற கலமும், நிலவில் ஊர்ந்து பயணித்து ஆய்வு செய்யும் ப்ரக்யான் என்ற ரோவர் கலமும் அனுப்பப்பட இருந்தன.
இதற்கான கவுண்ட் டவுன் தொடங்கி, ராக்கெட்டில் எரிபொருள் நிரப்பப்படும் பணியும் நடைபெற்றது. இந்த வரலாற்று நிகழ்வை நேரில் காண ஸ்ரீஹரிக்கோட்டவில் உள்ள சதிஷ் தவன் ஆய்வு மையத்தில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டிருந்தனர். ஆனால், துரதிருஷ்டவசமாக, ராக்கெட்டின் கவுண்ட் டவுன் விண்ணில் ஏவப்படுவதற்கு சரியாக 56 நிமிடம் 24 நொடிகள் இருந்தபோது நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக சற்று நேரம் கவுண்ட் டவுன் நிறுத்தப்பட்டதாக தகவல் பரவிய நிலையில், காலை 2.39 மணியளவில் இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
சிறிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராக்கெட் ஏவப்படுவது தள்ளிவைக்கப்படுவதாகவும், சந்திரயான் – 2 மீண்டும் விண்ணில் ஏவப்படும் நாள், நேரம் குறித்த அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சந்திரயான் – 2-ன் விண்வெளிப் பயணத்தைப் பார்க்க ஆவலோடு காத்திருந்த பொதுமக்கள் இதனால் ஏமாற்றமடைந்தனர்.
சந்திரயான் – 2 விண்ணில் செலுத்தப்படுவது தள்ளிவைக்கப்படுவது, இது 5-வது முறையாகும்.
முதன்முதலாக, சந்திரயான்-2 விண்கலத்தை கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டது. ஆனால் 2018 மார்ச் மாதத்தில் விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைகோள் தனது தகவல்தொடர்பை இழந்ததால், சந்திரயான்-2 திட்டம் அக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் தொழில்நுட்பக்காரணங்களால் நவம்பர் மாதத்துக்கும் அதன் பின்னர் 2019 ஜனவரிக்கும் இத்திட்டம் தள்ளிப்போனது.
இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் சந்திரயானை ஏவப் பலமுறைகள் திட்டங்கள் வகுக்கப்பட்டும் அவற்றை செயல்படுத்த முடியவில்லை. 2019 மே மாதத்தில் சந்திரயானை விண்ணில் ஏவ இஸ்ரோ இறுதியாகத் திட்டமிட்டது. ஆனால் அதே மே மாதத்தின் தொடக்கத்தில் ஏவப்பட்ட இஸ்ரேல் நாட்டின் ”பெர்சேஷெட்” என்ற விண்கலம் நிலவின் தரைப்பகுதியில் இறங்கும்போது விபத்துக்குள்ளானதால் சந்திரயான் 2 திட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்நிலையில் தான் 5-வது முறையாக சந்திரயான் 2-ன் பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
978 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் இந்தியாவின் பெருமைமிகு ஆய்வுத்திட்டமான சந்திரயான் – 2 விண்ணில் வரலாறு படைக்கப்போகும் தருணத்தை விஞ்ஞானிகளுடன் நாட்டு மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.