தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த வேண்டும்-ஏ.நவநீதகிருஷ்ணன்

தமிழில் கேள்விகள் இடம்பெறாத தபால்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் நடத்த அ.தி.மு.க சார்பில் மாநிலங்களவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, மத்திய அரசின் தபால்துறையில், தபால் ஊழியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. வழக்கமாக, இந்த தேர்வில், ஆங்கிலம், இந்தி மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் கேள்விகள் இடம்பெற்று இருக்கும். இந்த நிலையில், ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே கேள்விகள் இடம்பெற வேண்டும் என்று தபால்துறைக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதனால், தமிழில் கேள்விகள் இடம்பெறாமலேயே, தபால்துறை தேர்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில், மாநிலங்களவையில் பூஜ்ய நேரத்தில், அ.தி.மு.க. உறுப்பினர் ஏ.நவநீத கிருஷ்ணன் பேசுகையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த தபால்துறை தேர்வில், கேள்வித்தாள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருந்தது என்றும், கேள்விகள் தமிழில் இல்லை என்றும் எடுத்துரைத்தார். தொடர்ந்து பேசிய அவர், கேள்விகள் தமிழில் இல்லாததால், நடந்து முடிந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தமிழ் கேள்விகளுடன் புதிதாக தேர்வு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version