போர்வை ஆர்டர் தருவதாக அழைத்து, கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக படமெடுத்து, பணம் கேட்டு மிரட்டிய மோசடி கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலை சேர்ந்தவர் 56 வயதான நாட்ராயன் . இவர் சொந்தமாக விசைத்தறி வைத்து போர்வை உற்பத்தி செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த 13-ம் தேதி இவரது செல்போனுக்கு ஒரு புதிய எண்ணிலிருந்து அழைப்பு ஒன்று வந்தது.
அதில் பேசிய பெண் ஒருவர், தனது பெயர் வெண்ணிலா என்றும், தங்களுக்கு போர்வை அதிகளவில் தேவைப்படுவதால் ஆர்டர் எடுத்து கொண்டு திருப்பூர் கணக்கம்பாளையம் அருகேயுள்ள ஆண்டிபாளையம் பகுதிக்கு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, தனது காரில் நாட்ராயன், உறவினர் குமார் என்பவரை அழைத்து கொண்டு, அவர்கள் தெரிவித்த முகவரிக்கு சென்றனர். அங்கு இவர்களுக்காக காத்திருந்த கும்பல் ஒன்று நாட்ராயனை மடக்கி பிடித்து ஆடைகளை களையுமாறு கத்தியை காட்டி மிரட்டினர். பின்பு வெண்ணிலாவின் அருகே நிற்க வைத்து ஆபாசமாக படம் எடுத்துள்ளனர்.
தங்களுக்கு ரூ.3 லட்சம் பணம் வேண்டும், காவல்துறையிடமும் செல்ல கூடாது மீறினால், படங்களை முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வெளியிட்டு மானத்தை கெடுத்துவிடுவோம் என மிரட்டி நாட்ராயனின் ஒன்றரை பவுன் தங்க நகைகள், செல்போன் மற்றும் 3 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக்கொண்டு அனுப்பியுள்ளனர்.
வீட்டிற்கு வந்த நாட்ராயன் பெருமாநல்லூர் காவல் நிலையத்திற்கு சென்று தான் மிரட்டப்பட்டது குறித்து புகார் அளித்தார். அதன் அடிப்படையில் மோசடி கும்பலின் செல்போன் எண்ணை வைத்து வெண்ணிலா என்ற மோசடி பெண்ணை முதலில் கைது செய்தனர், பின் அந்த கும்பலை சேர்ந்த இசக்கிபாண்டி, இசக்கிமுத்து, ஜெபராஜ், சின்னதுரை அகியோரை கைது செய்து விசாரணை நடத்தியதில் இதே போன்று பணம் வைத்திருக்கும் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிப்பது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
மோசடி கும்பலிடம் இருந்து நகை, பணம், கார், கத்தி, அரிவாள், மிளகாய்ப் பொடி, கயிறு உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்த காவல்துரையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.