தமிழக மக்கள் தொகை சரியும்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்

இன்றைய சூழலில் ‘மக்கள் தொகை பெருக்கம்’ – என்பது ஒரு உலகளாவிய பிரச்னையாக உள்ளது. இதற்கு நேர் எதிராக ‘மக்கள் தொகை குறைவு’ – என்பது எதிர்காலத்தில் தமிழகத்தின் பிரச்னையாக மாற உள்ளது – என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

சமீபத்தில் வெளியான மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழக மக்கள் தொகையின் போக்கு அடுத்த சில பத்தாண்டுகளுக்கு எப்படி இருக்கும் என்பதும் கணிக்கப்பட்டு உள்ளது. 

வரும் 2031ஆம் ஆண்டுக்கும் 2041ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தின் மக்கள் தொகையின் வளர்ச்சி சரிவை நோக்கிச் செல்லும். அந்த சரிவின் அளவு 0.05% இருக்கும்  என்கிறது பொருளாதார ஆய்வறிக்கை.

2041ல் அவ்வாறாக மக்கள் தொகையின் வளர்ச்சி சரியும் போது, தமிழகத்தில் இருக்கும் மொத்த மக்கள் தொகையில் இளைஞர்களின் பங்கு சரியும். அதனால் வரும் 2041ம் ஆண்டில் தென்மாநிலங்களில் உள்ள மக்களில் 5ல் ஒருவரே 20 வயதுக்கு உட்பட்டவராக இருப்பார், அனால் 59 வயதுக்கு மேற்பட்டவரோ 5ல் ஒருவர் அல்லது அதற்கும் மேல் அதிகமாக இருப்பார் – என்று கணிக்கப்பட்டு உள்ளது. இந்தக் கணிப்பில் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவது இந்த மக்கள் தொகை சரிவின் பின்னாக சுட்டிக் காட்டப்படும் காரணம்தான்.

சமீப பத்தாண்டுகளில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மொத்த கருத்தரித்தல் விகிதம் என்பது தொடர்ந்து குறைந்து வருகின்றது. வரும் 2021ஆம் ஆண்டிலேயே மாநிலத்தில், குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கையானது, மக்களின் இறப்பு எண்ணிக்கையை விடக் குறைவாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இந்த நிலையே அடுத்த 10 ஆண்டுகளில் தமிழக மக்கள் தொகையைக் குறைக்க உள்ளது.

சமூகத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை சரிந்து, முதியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது ஆட்பற்றாக்குறை, உற்பத்தியில் குறைபாடு – போன்ற பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்பதால் இந்த ஆய்வறிக்கை தமிழகத்திற்கு ஒரு முக்கிய எச்சரிக்கை மணியாகப் பார்க்கப்படுகிறது.

Exit mobile version