மலேசியாவில் எடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வெளியாகி இருக்கும் நேரடிதமிழ்த் திரைப்படம் ‘பூ சாண்டி வரான்.’ மிர்ச்சி ரமணாவை தவிர படத்தில் நடித்துள்ள அனைவருமே மலேசியத் தமிழர்கள்.
பழமையானப் பொருட்களை வாங்கி சேகரித்து விற்பனை செய்யும் அன்பு ஒரு மாற்றுத்திறனாளி, அவருக்கு உதவியாக இரண்டு நண்பர்கள்.
மூவரும் ஒருநாள் தாங்கள் தங்கியிருக்கும் பங்களாவில் பேயை அழைத்து பேசும் ‘Spirit of Coin’ எனும் விளையாட்டை விளையாடுகிறார்கள்.
அதற்காக அவர்கள் பழங்கால நாணயம் ஒன்றையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், விளையாட்டாய் செய்யும் காரியம் எதிர்பாராதவிதமாக வினையாய் முடிகிறது. மூவரில் ஒருவர் மரணிக்க, அடுத்து நடப்பதெல்லாம் படு த்ரில்லிங்கான ஹாரர் கேம்.
அதிர வைக்கும் த்ரில்லர் காட்சிகள், எதிர்பாராத ட்விஸ்ட், நேர்மையான க்ளைமாக்ஸ் என படத்தை திறமையாக இயக்கியுள்ளார் ஜெ.கே.விக்கி. மதுரையை பெருமைப்படுத்தி கடாரத்தின் பூர்வீகக் கதையை சொல்லும் காட்சி அசத்தலாக உள்ளது.
சைவ-வைணவ பிரச்சினை, சோழர்-பாண்டியர் கதை, பூச்சாண்டி யார் என விளக்கும் காட்சி என, ஒரு ‘லோ பட்ஜெட் தசாவதாரமாக’ படத்தை இயக்கியுள்ள விக்கிக்கு பாராட்டுகள்.
தினேஷ் சாரதி கிருஷ்ணன், லோகன்நாதன், மிர்ச்சி ரமணா, கணேசன் மனோகரன், ஹம்சினி பெருமாள் உள்ளிட்ட அனைவருமே மிகையற்ற நடிப்பால் கவனம் ஈர்க்கின்றனர்.
மலேசியாவை சுற்றிப்பார்த்ததுப் போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது முகமதுஅலியின் ஒளிப்பதிவு. ஷாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்க்கிறது.
பேயை காண்பிக்கும் காட்சிகள் மட்டும் கொஞ்சம் பழைய ஸ்டைலில் வந்து பொறுமையை சோதிக்கின்றன. ஃபிளாஷ் பேக்கில் வரும் வரலாற்று காட்சிகளில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம், எனினும் இந்த ‘பூ சாண்டி’ நம்மை மிரட்டத் தவறவில்லை.