தேர்தலை புறக்கணித்த பொன்னங்குப்பம் பகுதி மக்கள்! வெறிச்சோடிய வாக்குச்சாவடி!! ஏன்??

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தனி ஊராட்சிக் கேட்டு கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்ததால், வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

துத்திப்பட்டு கிராமத்துடன் பொன்னங்குப்பம் ஊராட்சி இணைக்கப்பட்டு, கடந்த காலங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று வந்துள்ளன.

பொண்ணங்குப்பத்தில் குறைவான ஆயிரத்து 400 வாக்காளர்களே உள்ள நிலையில், 2 ஆயிரத்து 400 வாக்குகள் கொண்ட துத்திப்பட்டைச் சேர்ந்தவர்களே தனிப்பெரும்பான்மையுடன் ஊராட்சிமன்றத் தலைவர், ஒன்றிய கவுன்சிலர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளை வகித்து வருகின்றனர்.

இதனால் பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர்களால் ஜனநாயக பதவிகளையும் பெற முடியாதததால், கடந்த பல வருடங்களாக தங்கள் கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றக்கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

இதுகுறித்து, இதுவரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படாததால், தேர்தலை புறக்கணிக்க முடிவெடுத்து, இதற்காக, வார்டு உறுப்பினர் பதவிக்கு மனுத்தாக்கல் செய்த 22 வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுவை திரும்பப் பெற்றனர்.

அதனைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற தேர்தலில், பொண்ணங்குப்பம் பகுதி மக்கள் வாக்களிக்க செல்லாததால், அங்குள்ள வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.

Exit mobile version