பொன்னமராவதி வன்முறை: வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம்

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் குறித்து அவதூறாக பேசி ஆடியோ வெளியிட்ட நபர்களின் தகவல்களை தருமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது.

ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் பெண்கள் குறித்து அவதூறாக பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக ஆடியோ வெளியிட்ட நபர்களை கைது செய்ய வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்ததால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி, தஞ்சாவூர் டிஐஜிக்கள் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே பலத்த பாதுகாப்புடன் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்படுவதால் அங்கு இயல்புநிலை திரும்பி வருகிறது. இருப்பினும் சில பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.

கறம்பக்குடி உள்ளிட்ட கிராமங்களிலும் தங்கள் சமூக பெண்கள் குறித்து அவதூறாக பேசிய நபர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்தநிலையில் அவதூறு ஆடியோவை வெளியிட்ட நபர்கள் குறித்த தகவல்களை தருமாறு வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு காவல்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version