புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் ஏற்பட்ட போராட்டத்தின் போது பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக ஆயிரம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த பெண்களை தவறாக பேசிய ஆடியோ ஒன்றை சமூக விரோதிகள் வாட்ஸ் ஆப்பில் பரப்பி உள்ளனர். இதைக் கண்டித்து பொன்னமராவதியில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் சாலைகளில் மரங்களை வெட்டியும், கடைகளை அடித்து நொறுக்கியும், காவல்துறை வாகனங்கள், அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை உடைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 2 காவல்துறையினர் காயமடைந்தனர். இதையடுத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் குவிக்கப்பட்டனர்.
செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி, இரு சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக கூறினார். தவறாக சித்தரித்து ஆடியோ வெளியிட்டவர்களை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளதாக கூறிய அவர், இன்று மதியம் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதனிடையே புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடையை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.