ஜனவரி ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வழங்க, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்குத் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஜனவரி 15 ஆம் தேதி, பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஒன்பதாம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை வழங்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கெனவே வழங்கப்பட இருந்த இந்தப் பரிசுத் தொகுப்பானது, உள்ளாட்சித் தேர்தலைக் கருத்தில் கொண்டு தள்ளிவைக்கப்பட்டது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் உலர் திராட்சை, 20 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய், 2 அடி நீளக் கரும்புத் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், பொங்கல் விழாவைச் சிறப்பாக் கொண்டாட ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகையை, பரிசுத் தொகுப்புடன் சேர்த்து வழங்கவும், இந்த பணிகளை ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதிக்குள் முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதி இவற்றை வழங்கி, இப்பணியினை முழுமையாக முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.