தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு, நாளை முதல் வழங்கப்படவுள்ளது.
பொங்கள் பண்டிகையையொட்டி அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் கூடிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, அத்திட்டத்தை துவக்கி வைத்தார். இந்த நிலையில், அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை முதல் வரும் 12-ம் தேதி வரை பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 10 கிராம் உலர் திராட்சை, 10 கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் மற்றும் முழுக்கரும்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது. முன்னதாக, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, அரிசி அட்டைதார்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு, அதில் குறிப்பிட்டுள்ள நேரத்தில் வந்து பரிசுத் தொகுப்பை பெற்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள 2 கோடியே 10 லட்சம் அரிசு குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் எனவும், விடுபட்ட நபர்களுக்கு, 13-ம் தேதி பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.