பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறுவதற்கான டோக்கன், வரும் 26ம் தேதி முதல் 30ம் தேதி வரை, பொது மக்களின் வீடு தேடி விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பொங்கல் பரிசு மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கத்தொகையை, ஜனவரி 4 ஆம் தேதி முதல் தொடங்கி, 12 ஆம் தேதிக்குள் வழங்கிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கு 13 ஆம் தேதி அன்று வழங்கி இப்பணியினை முழுமையாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. முற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் பிற்பகலில் 100 குடும்ப அட்டைகளுக்கும் வழங்கும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு, இம்மாதம் 26 ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரை வீடு தோறும் டோக்கன் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுழற்சி முறையில், தெரு வாரியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்வதற்கு அட்டவணை தயார் செய்து, அட்டைதாரர்கள் நன்கு அறியும் வகையில், முன்கூட்டியே நியாய விலைக் கடைகளில் விளம்பரம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பரிசுத்தொகுப்பும் ரொக்கத்தொகை இரண்டாயிரத்து 500 ரூபாயும் ஒரே நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.