பொங்கல் பரிசு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல்

தமிழக அரசு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பினை கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் தரலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

கடந்த 7ம் தேதி முதல் அனைத்து பயனாளிகளுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்கக்கூடாது என்று நேற்று முன்தினம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசு இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.

இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு, தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று கவுரவ குடும்ப அட்டைதாரர்கள் தவிர்த்து மற்ற அனைவருக்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பை வழங்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, இது தொடர்பாக யாரேனும் வழக்கு தொடர்ந்தால், தங்கள் தரப்பு விளக்கத்தை கேட்காமல் உச்சநீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது என்று, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version