பொங்கல் பரிசு தொகுப்பு – ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பொங்கல் சிறப்பு தொகுப்புடன், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் விநியோகம் செய்வது தொடர்பாக, ரேஷன் கடை பணியாளர்களுக்கான அறிவுறுத்தல்களை அரசு வழங்கியுள்ளது.

அதன்படி, மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில், ஆயிரம் குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள ரேஷன் கடைகளில், கூடுதலாக ஒரு பணியாளரை நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பை பெறுவதற்கு காலையில் 100 பேர், பிற்பகலில் 100 பேர் என தினமும் 200 பேருக்கு மிகாமல் பொங்கல் பரிசு வழங்க வேண்டும் என்றும், பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் போன்ற விவரங்களை குறிப்பிட்டு டோக்கன்களை 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதிக்குள் வீடு தேடிச் சென்று வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், ஆண்கள் தனியாகவும், பெண்கள் தனியாகவும் வரிசையில் நிற்கும் வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுழற்சி முறையில் தெருக்களை தேர்ந்தெடுத்து நியாய விலைக்கடைகளில் விளம்பரம் செய்யவும், விடுபட்ட அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி 13ஆம் தேதியன்று விநியோகம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைகேடுகளில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கண்காணிப்பு அலுவலர் பரிந்துரைக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

Exit mobile version