தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொங்கல் கொண்டாட்டம்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாகப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில், மியூசிக் சேர், பானை உடைத்தல் போன்ற விளையாட்டு போட்டிகளும், கோலப்போட்டிகளும் இடம்பெற்றன. சுற்றுலாப் பயணிகள் கலந்து கொண்ட கோலப்போட்டியில், சிறந்த கோலங்களை சுற்றுலாப் பயணிகளே தேர்வு செய்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பூங்கா நிர்வாகம் சார்பில், மரக் கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.  

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலா துறை சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் ரத்னா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், இத்தாலி நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையணிந்து, பொங்கல் வைத்து கொண்டாடினர். அதனைத்தொடர்ந்து, தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில்
துணை வட்டாட்சியர் செல்வபூபதி தலைமையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதிகாரிகள் அனைவரும், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலையில் வந்திருந்து பொங்கல் விழாவைக் கொண்டாடினர்.

திருப்பூர் மாவட்ட ரெட் கிராஸ் அமைப்பு, நரிக்குறவர் இன மக்களுடன் சேர்ந்து, மனித நேயப் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. ரெட் கிராஸ் இயக்கம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள நரிக்குறவர் காலனியில், பொங்கல் விழா நடத்தப்பட்டது. விழாவில், 30 நரிக்குறவர் குடும்பங்களுக்கு சர்க்கரைப் பொங்கல், கரும்பு மற்றும் முதியவர்களுக்கு புதுத் துணிகள் வழங்கப்பட்டது. மேலும், விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள், ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version