பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தினை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக 16 பயனாளிகளுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேபோல், பொங்கல் பண்டிகைக்காக ஏழை மக்களுக்கு வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் மூலம் 425 கோடி செலவில், ஒரு கோடியே 67 லட்சம் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிகழ்வின் போது துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத்துறை அமைச்சர் காமராஜ், உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் உடன் இருந்தனர்.

அதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 137 பேருக்கு வனச்சரகர் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதன் அடையாளமாக 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் வழங்கினார். பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் முதலமைச்சருடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வின் போது, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மேலும் ,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு வாங்கப்பட்ட சொகுசு பேருந்தின் இயக்கத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி மூலம் ஒரு கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் 43 இருக்கைகள் கொண்ட சொகுசு பேருந்து வாங்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சொகுசு பேருந்தை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்திற்கு முதலமைச்சர் வழங்கினார். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதனை தொடர்ந்து ,தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனரகத்தின் உதவி பொறியாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் 32 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

Exit mobile version