புதுச்சேரியில், கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டபோது, வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரியில் பெய்த தொடர் கனமழை காரணமாக, சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகள் மற்றும் சாலைகள் மழையால் சேதமடைந்துள்ள நிலையில், மழை பாதிப்புகளை மத்திய உள்துறை இணைச் செயலாளர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டனர்.
பாகூர் பகுதியில் ஆய்வு செய்தபோது, மத்திய குழுவுடன் சென்ற மாநில வேளாண் இயக்குனரை விவசாயிகள் முற்றுகையிட்டனர். அப்போது, பாதிப்புகள் குறித்து வேளாண் இயக்குனர் இதுவரை கேட்டறியவில்லை என்றும், அவர் திரும்பிச் செல்ல வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் வாக்குவதத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, அதிகாரிகள் நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்னர், விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.