வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையை, வெளிநாட்டில் இருந்து கொண்டு சிதைப்பதா என காங்கிரஸ் கட்சிக்கு பாரதிய ஜனதா கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு எந்திரங்களில் மோசடி நடைபெற்றதாக சையது சுஜா என்பவர் லண்டனில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். டெல்லியை தவிர்த்து, 2014ம் ஆண்டுக்கு பின்னர் நடைபெற்ற பல்வேறு மாநில தேர்தல்களிலும் இந்த மோசடி நடைபெற்றதாக அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டை இந்திய தேர்தல் ஆணையம் திட்ட வட்டமாக நிராகரித்தது. இந்த நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்கள் மீதான நம்பிக்கையை காங்கிரஸ் கட்சி குலைத்து வருவதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் ரவி ஷங்கர் பிரசாத், எதிர்கட்சிகள், 2014 ம் ஆண்டு அளித்த மக்கள் தீர்ப்பை அவமதிப்பதாக குற்றம் சாட்டினார்.
லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சி, காங்கிரஸ் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டது என கூறிய அவர், 2014 ம் ஆண்டு ஆட்சியில் இருந்தது காங்கிரஸ் கட்சிதானே என்றும் பதிலடி கொடுத்தார்.