பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்துள்ளார். இதை அரசியலாக்கும் பண்பாடற்ற அரசியல்வாதி ஸ்டாலின் என்று கண்டனம் தெரிவித்தார்.
அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பொள்ளாச்சியில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, மத்தியில் அங்கம் வகித்த திமுக, தமிழக மக்களின் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
திரண்டு இருந்த பொதுமக்கள், தொண்டர்களிடையே எழுச்சியுரையாற்றிய முதலமைச்சர், பொள்ளாச்சி பகுதியின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர் அதிமுக வேட்பாளர் என்பதை சுட்டிக் காட்டினார். பொள்ளாச்சி சம்பவத்தில் தொடர்புடையவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத் தரப்படும் என்று உறுதியளித்த அவர், இந்தப் பிரச்சனையை அரசியலாக்க சிலர் முயற்சிப்பதாக வேதனை தெரிவித்தார்.
அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை எடுத்துக்கூறி மக்களிடம் அதிமுக வாக்கு கேட்டு வருவதாக குறிப்பிட்ட முதல்வர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து, குனியமுத்தூர் பகுதியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனுக்கு ஆதரவு திரட்டிய அவர், இஸ்லாமிய பெருமக்களுக்காக தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை அவர் பட்டியலிட்டார். முத்தலாக் சட்டத்தை நாடாளுமன்றத்தில் அதிமுக எதிர்த்ததால், மத்திய அரசால் சட்டமாக்க முடியவில்லை என்றார்.