தமிழகத்தில், நோய்த்தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது எனக் கூறி, மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி வரும் ஸ்டாலின், அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் என, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றச்சாட்டியுள்ளார். தமிழகத்தில், ஓய்வூதியம் பெறும் முதியவர்களுக்கு நியாயவிலைக் கடைகளில் அனைத்து பொருள்களும் கிடைக்கும் வகையில், மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் உள்ள முதியவர்களுக்கு, குடும்ப அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஆயிரத்து 919 முதியவர்களுக்கு மின்னணு குடும்ப அட்டைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நோய்த்தொற்று சமூக பரவலாக மாறிவிட்டது எனக் கூறி, திமுக தலைவர் ஸ்டாலின் பீதியை கிளப்பி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் முதலமைச்சர் சிறப்பாக செயல்படுவதாகவும், அரசின் நடவடிக்கைகளை பாராட்ட மனம் இல்லை என்றாலும், ஸ்டாலின் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என்றும் சாடினார்.