கர்நாடக முதல்வர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்து ஒருவாரம் ஆகியும், இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்யாததை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி எம்.எல்.ஏக்கள் 17 பேர் ராஜினாமா கடிதம் அளித்ததால் கர்நாடகவில் ஆட்சி கவிழ்ந்தது. கடந்த 30ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபித்த எடியூரப்பா 105 எம்எல்ஏக்கள் பலத்துடன் முதல்வர் பொறுப்பேற்றார். ஆனால் ஆட்சி அமைத்தும் ஒருவாரம் ஆகியும் கூட இன்னும் அமைச்சரவையை தேர்வு செய்யாமல் எடியூரப்பா மட்டுமே அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருக்கிறார்.
இது கர்நாடக அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவிற்கு கர்நாடகாவில் 105 எம்.எல்.ஏக்கள்தான் இருக்கிறார்கள். அங்கு பெரும்பான்மை பெற 104 எம்.எல்.ஏக்கள் தேவை. இதனால் அதிருப்தி எம்.எல்.ஏக்கள் யாரும் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக, பாஜக அரசு அமைச்சரவையை மிகவும் கவனமாக தேர்வு செய்ய முடிவெடுத்துள்ளது. அதே சமயத்தில் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து யாரும் விலகிவிடாத படி அமைச்சரவையை உருவாக்க பாஜக திட்டமிட்டு வருகிறது.
அமைச்சரவை தேர்வு செய்யப்படாததை டுவிட்டரில் விமர்சித்துள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி வேணுகோபால், முக்கிய உறுப்பினர்கள் எல்லோரும் அமைச்சராக வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருவதாலும், யாரை அமைச்சராக தேர்வு செய்வது என்று தெரியாமல் முதல்வர் எடியூரப்பா குழம்பி வருவதாக விமர்சித்துள்ளார்.