மகாராஷ்டிரா அரசியல் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

மகாராஷ்டிரத்தில் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸுக்கு ஆளுநார் பகத்சிங் கோஷியாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிராக, சிவசேனை-தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் கூட்டணி தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

மகாராஷ்டிர அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸை முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவாரை துணை முதல்வராகவும் ஆளுநர் பகத்சிங் கோஷியாரி கடந்த 23ஆம் தேதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சிவசேனை-என்சிபி-காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சியமைக்க தீர்மானித்திருந்த நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக அஜித் பவார் மேற்கொண்ட முடிவு அந்தக் கூட்டணிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தேவேந்திர பட்னாவிஸுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் பகத்சிங் கோஷியாரியின் நடவடிக்கைக்கு எதிராக 3 கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் கூட்டாக மனு தாக்கல் செய்தன. அந்த மனுவை நீதிபதிகள்,தேவேந்திர பட்னவிஸுக்கு அழைப்பு விடுத்து ஆளுநர் அனுப்பிய கடிதம், ஆட்சியமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் பட்னவிஸ் சமர்ப்பித்த கடிதம் ஆகியவற்றை மத்திய அரசு சமர்ப்பிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது.

உத்தரவின்படி இரு கடிதங்களையும் அரசு வழக்கறிஞர் துசார் மேத்தா, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். ஆளுநரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும், இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டிய தேவையில்லை எனவும் துசார் மேத்தா வாதிட்டார். மூத்த உறுப்பினரை அவைத் தலைவராக நியமித்து வீடியோ பதிவுடன் 24 மணி நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சிகளின் வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். பாஜக சார்பில் ஆஜரான முகுல் ரோகத்கி, குறித்த நேரத்துக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது எனக் குறிப்பிட்டார். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை ஒத்தி வைத்தனர். அதன்படி இன்று காலை மகராஷ்டிரா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்த நிலையில், மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் தங்களது பெரும்பான்மையைக் காண்பிக்கும் வகையில் சிவசேனை – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் எம்எல்ஏ-க்கள் ஒன்று கூடினர். சிவசேனை தலைவர் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் அசோக் சவான், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது பேசிய சரத் பவார், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது 162-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை கொண்டு வருவோம் என்று கூறினார்.

Exit mobile version