மகாராஷ்டிரத்தில் நிலவுவது அரசியல் குழப்பம் அல்ல, உரிமைக்கான போராட்டம் என சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவுத் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரத்தில் 288 தொகுதிகளுக்கு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றிபெற்றன. பாஜக – சிவசேனா கூட்டணி தேவையான பெரும்பான்மை பெற்றுள்ளபோதும் யாருக்கு முதலமைச்சர் பதவி என்பதில் போட்டி நிலவுவதால் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. மகாராஷ்டிரச் சட்டமன்றத்தின் பதவிக்காலம் வரும் 8ஆம் தேதி முடிவடையும் நிலையில், அதற்குள் ஆட்சிமைப்பதற்குத் தேவையான ஆதரவைப் பெறும் முயற்சியில் பாஜகவும், சிவசேனாவும் தனித்தனியாக ஈடுபட்டு வருகின்றன.
இதையடுத்து சிரோலி தொகுதியின் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திர பாட்டீல், உத்தவ் தாக்கரேயைச் சந்தித்து சிவசேனாவுக்குத் தனது ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் மும்பையில் செய்தியாளரிடம் பேசிய சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத், மகாராஷ்டிரத்தில் நிலவுவது அரசியல் குழப்ப நிலை இல்லை என்றும், நீதி மற்றும் உரிமைக்கான போராட்டம் என்றும் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் சிவசேனா கட்சியே வெற்றி பெறும் எனவும் சஞ்சய் ராவுத் தெரிவித்தார்.