கர்நாடகாவில் ஆளும் கூட்டணியை சேர்ந்த 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள், ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணியில் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு 38 எம்.எல்.ஏ. க்களும் காங்கிரசுக்கு 79 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். எதிர்க்கட்சியான பாஜகவுக்கு 105 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.
ஆளும் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்கள் ஏற்கனவே ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று மேலும் 11 எம்.எல்.ஏ க்கள் தலைமைச்செயலகம் சென்று சபாநாயகரின் செயலாளரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்தனர். இதனை சபாநாயகர் ரமேஷ் குமாரும் உறுதிபடுத்தியுள்ளார். இவர்களில் 6 பேர் ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்திக்க சென்றுள்ளனர்.
இதையடுத்து கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது . இந்த நிலையில் ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரையும் திங்கட்கிழமை சந்தித்து பேசப்போவதாக சபாநாயகர் ரமேஷ் குமார் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் ஆட்சி அமைக்க 113 எம்.எ.ஏக்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் இவர்களின் ராஜினாமா ஏற்கப்பட்டால் ஆட்சி கவிழ்வது உறுதி என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளன்னர். இதனிடையே அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் குமாரசாமி நாளை கர்நாடகா திரும்புகிறார்.