முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்படுவது, விடியா அரசின், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளுக்கு மற்றுமொரு உதாரணம் என்று, அதிமுக தலைமை விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நடவடிக்கைகளில் விடியா தி.மு.க. அரசு ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல், மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருக்கும் விடியா அரசு, மக்களின் மன ஓட்டத்தை மாற்ற, அதிமுக முன்னணியினர் மற்றும் நிர்வாகிகள் மீது, பொய் வழக்குகளை பதிவு செய்தும், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தல் என்ற பெயரில் தனது காவல்துறையினரை ஏவி, பலவித இடையூறுகளை தொடர்ந்து ஏற்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இதன் ஒரு பகுதியாக, முன்னாள் அமைச்சர், கே.சி. வீரமணியின் வீடு உள்பட 28 இடங்களில், அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக, ‘ஸ்டாலின் போலீசார் ‘, சோதனை என்ற பெயரில் இன்று ஒரு கபட நாடகத்தை அரங்கேற்றி, ஜனநாயகப் படுகொலை செய்துள்ளதாகவும், இது உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் திட்டமிட்டு ஆடும் நாடகமே தவிர வேறொன்றுமில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் நாடு முழுவதுமே 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், வெறும் 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் இருந்தே, திமுக-வின் தேர்தல் தோல்வி பயம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிவதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்குத் தோல்வி ஏற்படும் என்று சந்தேகப்படும் மாவட்டங்களில், அதிமுக முக்கிய நிர்வாகிகளை செயல்பட விடாமல் தடுக்கும் நோக்கத்தின் முதல்படியாக இன்று, கே.சி. வீரமணி வீட்டில் நடத்தப்படும் சோதனையை ஒரு பழிவாங்கும் படலமாகவே அரசியல் பார்வையாளர்களும், பொதுமக்களும் பார்ப்பதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
திமுகவின் இத்தகைய சலசலப்புகளுக்கும், பயமுறுத்தும் நடவடிக்கைகளுக்கும் அதிமுகவினர் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள் எனவும், இத்தகைய ஒடுக்குமுறைகளை சட்டத்தின் துணையோடு எதிர்கொண்டு வெற்றி பெறுவோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் அனைத்து முக்கியமான துறைகளிலும், தமிழ்நாடு, இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக திகழ்ந்ததை மனதில் நிலைநிறுத்தி, அதுபோல், தமிழ் நாட்டை தொடர்ந்து முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று “விடியா’ திமுக அரசை அறிக்கை வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளனர்.