அரசியல் பச்சோந்தி “வைகோ”

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை அவதூறாக பேசிய வைகோவை பச்சோந்தி என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் வைகோவை “பச்சோந்தி” என விமர்சித்துள்ளார்.

வைகோவுக்கு இந்த வார்த்தை ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு தேர்தலிலும் தான் கூட்டணி வைக்கும் கட்சியோடு தேர்தலுக்கு பின்னர் சில நாட்கள் வரை இணக்கமாக இருந்து பின் அவர்கள் மீது குற்றச்சாட்டுகளை கூறி கூட்டணியை முறித்து கொள்வார்.

1992ல் திமுக தலைவர் கருணாநிதியை கொல்ல முயற்சித்ததாக திமுகவில் இருந்து நீக்கப்பட்ட வைகோ 1994ல் மதிமுகவை ஆரம்பித்தார். முதன்முதலில் திமுகவை உடைத்த வைகோ 1999ம் ஆண்டு தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் திமுகவுடன் கூட்டணி வைத்து கடும் விமர்சனத்திற்குள்ளானார்.

பின் 2004ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்த வைகோ, பல்வேறு காரணங்களுக்காக 2007ல் கூட்டணியை முறித்துக் கொண்டார்.2009 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த வைகோ, 2011 சட்டமன்ற தேர்தலில் கருத்து வேறுபாடுகளால் அவருக்கு எந்த கூட்டணியிலும் இடம் கிடைக்கவில்லை. அந்த தேர்தலில் அவரின் கட்சி தனித்துக்கூட போட்டியிடவில்லை.

2009ல் நடந்த ஈழப்பிரச்சனைக்கு பிறகு பொதுவெளியில் திமுக, காங்கிரசை கடுமையாக விமர்சித்தார். திமுகவோடு கூட்டணி வைப்பது குறித்தும் அவர் கடுமையாக சாடினார். பின் 2016ம் ஆண்டு தேர்தலில் தேமுதிக,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக ஆகிய கட்சிகளை இணைத்துக்கொண்டு “மக்கள் நல கூட்டணி”யாக உருவெடுத்தார். ஆனால் கடைசி நேரத்தில் தான் மட்டும் போட்டியிடாமல் சாமர்த்தியமாக தவிர்த்தார். அந்த தேர்தலில் பிரச்சாரத்தில் தான் போட்டியிடாதத்திற்கு காரணம் திமுக தான் என வெளிப்படையாகவே பிரசாரத்தில் வசை பாடினார். மேலும் தேர்தல் முடிவுகள் வைகோவை மட்டுமல்ல கூட்டணி சேர்ந்த மற்ற கட்சிகளுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்தது. மேலும் வழக்கப்படி தேர்தலுக்குப்பின் மக்கள் நல கூட்டணியை விட்டு விலகினார்.

இதில் 2016ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது, 2 ஜி விவகாரத்தில் சிபிஐயிடம் சாதிக்பாட்ஷா, ஒப்புதல் வாக்குமூலம் அளித்த ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் கூறி இருந்தார். ஆனால் 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்தவுடன் அதுபற்றி தனக்கு எதும் தெரியாது என பல்டி அடித்தார்.

மேலும் திமுகவை அழிக்க ஸ்டாலின் ஒருவரே போதும் என சொன்ன வைகோ, அரசியல் ஆதாயத்துக்காக கூட்டணி வைத்தார். அதன் விளைவாய் மாநிலங்களவை எம்.பி.யும் ஆனார்.

காஷ்மீர் விவகாரத்தில் மாநிலங்களவையில் பேசிய வைகோ, காஷ்மீர் பிரச்சனைக்கு காங்கிரஸ் கட்சித்தான் காரணம் என அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.மேலும் ஜனநாயகத்தை காங்கிரஸ் தான் படுகொலை செய்ததாக சொல்ல திமுக கூட்டணியில் பிரச்சனை வெடித்தது.

இந்நிலையில், இன்றைய தினம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து கொண்டு வைகோ இவ்வாறு பேசியுள்ளது அவரின் அரசியல் பச்சோந்தி தனத்தை தோலுரித்து காட்டுகிறது என்றும் விமர்சித்தார்.

இதற்கு பதிலளித்த வைகோ, காங்கிரஸ் தயவால் தான் எம்.பி. ஆகவில்லை எனவும், தமிழ் இனத்தை அழித்தவர்கள் காங்கிரஸ் என பதிலடி கொடுத்தார்.
இன்றைக்கு இவ்வளவு தூரம் காங்கிரசை விமர்சித்து பேசும் வைகோ , திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளதென்று தெரியாமலா கூட்டணி வைத்தார். இல்லை ஈழத்தமிழர்கள் பிரச்சனை தான் அவருக்கு மறந்துவிட்டதா என்று தெரியவில்லை.

தனது செயல்பாடுகளால் “அரசியல் கோமாளி” என்று பெயரெடுத்த வைகோ, காங்கிரஸ் கட்சியுடனான பிரச்சனையில் மீண்டும் அதனை நிரூபித்துள்ளார்.

Exit mobile version