சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற காவலர், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததால் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
தர்மபுரி மாவட்டம், ஜரூர் தாலுக்காவை சேர்ந்த 24 வயதான வேலுச்சாமி என்ற ஆயுதப்படை காவலர், கடந்த 4ஆம் தேதி, சேப்பாக்கம் விருதினர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்தார்.அப்போது, கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு அவர் தற்கொலைக்கு முயன்றார். துப்பாக்கி குண்டு மூளையை துளைக்காததால், நூலிழையில் உயிர் தப்பிய வேலுச்சாமிக்கு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆயுதப்படை காவலர் வேலுச்சாமியின் தற்கொலைக்கான காரணம் குறித்து திருவல்லிக்கேணி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், வேலுச்சாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 7 லட்ச ரூபாய் பணத்தை இழந்ததால், மனமுடைந்து தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது. 7 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கி, அவற்றை ஆன்லைன் ரம்மி விளையாட்டில், அவர் இழந்துள்ளார். இதனால் மனமுடைந்த வேலுச்சாமி பாதுகாப்பு பணியிலிருந்த போது துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.