டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் குற்றவாளிகள் 4 பேருக்கு போலீஸ் காவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகள் 4 பேரை 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட சென்னை கொளத்தூரைச் சேர்ந்த கார்த்திகேயன், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பத் ஆகியோர் ஆலந்தூர் நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் தேதி சரணடைந்தனர். திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த தமிழ் ஆசிரியர் செல்வேந்திரன் சென்னை ஜார்ஜ்டவுன் விரைவு நீதிமன்றத்திலும், கொளத்தூரைச் சேர்ந்த பிரபாகரன் டிஎன்பிஎஸ்சி தேர்வர் எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்திலும், கடந்த 14ஆம் தேதி சரணடைந்தனர். இந்த நான்கு பேரையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த நிலையில் நான்கு பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிஐடி காவல்துறைக்கு சென்னை எழும்பூர் சிபிசிஐடி நீதிமன்ற நீதிபதி நாகராஜன் அனுமதி வழங்கினார்.

இதனிடையே டிஎன்பிஎஸ்சி குரூப் 2A விவகாரம் தொடர்பாக ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சைதாப்பேட்டை பதினோராவது குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் பணம் பெற்றுக் கொண்டு முறைகேடாக தேர்ச்சி பெற வைத்தது தொடர்பாக ஜெயக்குமார் மற்றும் ஓம் காந்தனை கைது செய்த அதிகாரிகள் 5 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர். இந்நிலையில், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது, சிபிசிஐடி அதிகாரிகளின் மனுவை ஏற்று 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version