திமுக எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி வீடுகளில் காவல்துறையினர் அதிரடி சோதனை

கரூரில், திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடுகளில், காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். காவல்துறையினரை பணி செய்ய விடாமல் திமுகவினர் அராஜகம் செய்வதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜியின் வீடு, கரூரை அடுத்த ராமேஸ்வரப்பட்டியில் உள்ளது. 

இன்று காலையில், சென்னையிலிருந்து, டி.எஸ்.பி ஒருவரின் தலைமையில், ஆய்வாளர் உட்பட 15க்கும் மேற்பட்ட காவல்துறையினர், செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் கரூர் ராமகிருஷ்ண புறத்திலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்கின் வீடு மற்றும் டெக்ஸ் உள்ளிட்ட மூன்று இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலை வாங்கித் தருவதாக, 16 பேரிடம், 95 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று, சென்னை காவல்துறையினர், கரூரில் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பழைய வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் அனுமதி பெற்று இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, சோதனையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரை பணி செய்ய விடாமல், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், கரூரில் சோதனை நடைபெறும் இடத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Exit mobile version