12 காவல்துறை அதிகாரிகளின் பணிகளை மாற்றம் செய்து, தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், சென்னை கீழ்ப்பாக்கத்தில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆணையராக பணிபுரிந்த ராமசாமி, விழுப்புரம் மாவட்டத்தின் ஆயுதப்படை காவல்துறை துணைக் கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறையில் உதவி ஆணையராக பணியாற்றிய ஜூலியஸ் கிறிஸ்டோபர், கீழ்ப்பாக்கம் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை பரங்கி மலையில் ஆயுதப்படை உதவி ஆணையராக பணியாற்றும் ஜெயகரன் சாமுவேல், திருவல்லிக்கேணி போக்குவரத்துதுறைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மாநகர நவீன கட்டுபாட்டு அறையின் உதவி ஆணையராக பணியாற்றிய ஹிட்லர், அடையாறு போக்குவரத்து காவல்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை உதவி ஆணையராக இருந்த ஸ்ரீதர், மயிலாப்பூர் உதவி ஆணையராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றிய முருகராஜ், சிஐடி ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையில் சிஐடி துணைக்கண்காணிப்பாளராக இருந்த ஜீவன் ஜேக்கப் ஜான், போக்குவரத்து காவல்துறை உதவிஆணையராக பணிமாறுதலுக்கு உள்ளாக்கப்பட்டார். விழுப்புரம் மாவட்ட ஆயுதப்படை துணைக்கண்காணிப்பாளராக இருந்த கணேஷ்குமார், சென்னை புதுப்பேட்டைக்கு உதவி ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டஆயுதப்படை துணைக்கண்காணிப்பாளரான ஸ்ரீனிவாசன், சென்னை பரங்கி மலை உதவிஆணையராக மாற்றமாகியுள்ளார். காஞ்சிபுரம் ஆயுதப்படை துணைக்கண்காணிப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த கோபி, சென்னை மாநகரத் தலைமையில் உதவி ஆணையராக பணிமாற்றம் ஆகியுள்ளார். திருச்சி மாநகர உதவி ஆணையராக இருந்த ராஜகோபால், சென்னை மாநகர நவீன கட்டுப்பாட்டு அறைக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட துணைக்கண்காணிப்பாளராக இருந்த பாலசுப்பிரமணியன், மதுரை மாநகர சிறப்புகாவல்துறையின் பட்டாலியன் துணைக்கண்காணிப்பாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.