சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க மேற்கு வங்க அரசுக்கு உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் காவல் ஆணையர் வழக்கு தொடுத்துள்ளார்.
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க கொல்கத்தா காவல் ஆணையருக்கு உத்தரவிட கோரி சிபிஐ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷர் மெஹ்தா, மேற்குவங்கத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலை சுட்டிக் காட்டி சிபிஐ தாக்கல் செய்திருக்கும் மனுவை விரைவாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இதனையடுத்து இந்த மனு மீது நாளை விசாரணை நடத்தப்பட உள்ளது. இதனிடையே சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் காவல் ஆணையர் ராஜீவ் குமார் மனு தாக்கல் செய்திருப்பது குழப்பத்தை அதிகரித்துள்ளது.