முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அளித்த புகாரின் பேரில், கொலை மிரட்டல் விடுத்ததாக, சசிகலா மற்றும் மர்ம நபர்களின் மீது 4 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னாள் அமைச்சரும், விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளருமான சி.வி. சண்முகம், கடந்த 7ஆம் தேதி, சசிகலா குறித்து ஊடகங்களில் சில கருத்துகளை தெரிவித்தார்.
அதற்கு நேரடியாகப் பதில் அளிக்காமல், அடியாட்கள் மூலம், தொலைபேசி வாயிலாக, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், வாட்ஸ் அப், ட்விட்டர், ஃபேஸ்புக் வாயிலாக, ஆபாசமாகவும், அநாகரிகமாகவும் பதிவிட்டுள்ளனர்.
கடந்த 9ம் தேதி, இது தொடர்பாக, ரோஷணை காவல்நிலையத்தில் புகார் அளித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், கொலை மிரட்டல் விடுத்த 500க்கும் மேற்பட்ட நபர்களின் தொலைபேசி எண்களை வழங்கினார்.
மேலும், சசிகலா மற்றும் அவரது தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்தார்.
இந்த நிலையில், சசிகலா மற்றும் மர்ம நபர்களின் மீது கொலை மிரட்டல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்தல், அடுத்தவரை தூண்டிவிட்டு கலவரம் செய்தல், களங்கம் ஏற்படுத்தி அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.