கடவுளின் அவதாரம் என்று கூறி வரும் பெண் சாமியார் அன்னபூரணியின் புத்தாண்டு நிகழ்ச்சிக்கு, காவல்துறை தடை விதித்துள்ளது.
ஆதிபராசக்தியின் மறு உருவம் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வலம் வரும் அன்னபூரணி எனும் பெண் சாமியாரை காண, செங்கல்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் அதிகமாக கூடும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாயின.
இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட காணொலியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விவாதிக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சியில் தனிப்பட்ட பிரச்னைக்காக பங்கேற்ற பெண், தற்போது எப்படி சாமியார் ஆனார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பெண் சாமியாரின் நிகழ்ச்சி வரும் புத்தாண்டு தினத்தன்று, மண்டபம் ஒன்றில் நடைபெற இருப்பதாக போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், நிகழ்ச்சிக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளனர்.