பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை – காவலருக்கு தர்ம அடி!

சென்னை தனியார் மருத்துவமனையில் பெண் ஊழியரின் கையை பிடித்து இழுத்த காவலரை பிடித்து, பொதுமக்கள் தர்ம அடிகொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகாரில் சிக்கிய காவலர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் கைது செய்யப்பட்டார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருபவர் அனு. இவர், வடபழனி 100 அடி சாலையில், இரவு 10 மணியளவில் பேருந்திற்காக காத்துகொண்டிருந்தார். அப்போது, எம்ஜிஆர் நகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ராஜு, அனுவிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டு, தன்னுடன் உல்லாசமாக இருப்பதற்கு வருமாறு கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், காவலர் ராஜூ, பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட போது, அவர் போதையில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே, காவலரின் அழைப்புக்கு அனு மறுப்பு தெரிவிக்கவே, காவலர் ராஜூ அனுவை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அனு, சத்தம்போட்டு காவலர் தன்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்வதாக அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒன்று கூடிய பொதுமக்கள், காவலர் ராஜூவை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

பொதுமக்கள் தாக்கியதில் காவலரின் மண்டை உடைந்து, அவருக்கு 3 தையல் போடப்பட்டுள்ளது. இதனையடுத்து, அனு தரப்பில் வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதே போல், காவலர் ராஜூவும், சகோதரர்களை வைத்து அனு தன்னை அடித்து துன்புறுத்தியதாக வடபழனி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சாட்சியங்களின் அடிப்படையில், சம்பவத்தின் உண்மை தன்மை தன்மை குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி, மூன்று பிரிவுகளின் கீழ் காவலர் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும், காவலர் ராஜுவை பணியிடை நீக்கம் செய்து, சென்னை மாநகர காவல்துறை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது…

 

Exit mobile version