நியாயம் கேட்டவரை வெளியில் தள்ளிய தலைமைச்செயலகம்

கூடுவாஞ்சேரி வட்டாட்சியர் மீது லஞ்ச புகார் தெரிவிக்க தலைமை செயலகம் வந்தவரை காவல்துறையினர் தரதரவென இழுத்து வந்து வெளியேற்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை கூடுவாஞ்சேரி நந்திவரத்தை சேர்ந்த அருள்தாஸ் என்பவரே புகார் அளிக்க வந்து இன்னலுக்கு உள்ளானவர். நந்திவரத்தில் உள்ள தனது வீட்டை விரிவுபடுத்திய அவர் மேற்கொண்டு வந்த கட்டுமானத்தை, அரசு நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்வதாக கூறி நகராட்சி அதிகாரிகள் இடித்துள்ளனர். இதுகுறித்து கூடுவாஞ்சேரி வாட்டாட்சியரிடம் முறையிட்டபோது வீட்டை இடிக்காமல் இருக்க அவர் லஞ்சம் கேட்பதாக அருள்தாஸ் புகார் தெரிவித்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் அருள்தாஸ் தலைமை செயலகம் வந்துள்ளார். ஆனால் அங்கும் நியாயம் கிடைப்பதற்கான வழி இல்லாததால், முதலமைச்சரின் கார் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட அருள்தாஸ் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரை தரதரவென இழுத்து வந்த காவல்துறையினர், தலைமை செயலகம் வெளியே கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

வட்டாட்சியர் மீது லஞ்ச புகார் கொடுக்க வந்தவரை தலைமை செயலகத்தில் இருக்கும் காவல்துறையினர் குற்றவாளியை போல நடத்தியுள்ளனர். நியாயம் கேட்டு வந்தவருக்கு தலைமை செயலகத்தில் நடைபெற்ற அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version