சென்னையில் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்திற்காக, ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். நூதனமாக மோசடியில் ஈடுபட்ட கும்பலை பற்றி விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவருக்கு, அவரது தந்தை கிருஷ்ணன் வீடு கட்டி தருவதற்காக, முகப்பேர் பகுதியில் நிலத்தை வாங்க முடிவு செய்துள்ளார். இதனை அறிந்த நிலத்தரகர் புருஷோத்தமன், கிருஷ்ணன் மற்றும் ராஜேஸ்வரியை அணுகி, 55 லட்சம் ரூபாய் மதிப்பில், 640 சதுர அடி காலி நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறியுள்ளார். அந்த நிலம் ராஜம் என்பவருக்கு சொந்தமானது எனவும், அவரது மகன் மருத்துவ சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதால் உடனடியாக விற்க இருப்பதாகவும், தாமதித்தால் விலை அதிகமாகிவிடும் என ஆசையை தூண்டியுள்ளார் புருஷோத்தமன்.
இதனையடுத்து, 48 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி, நிலத்தை வாங்க முடிவு செய்தார் கிருஷ்ணன். பின்னர் புருஷோத்தமன், அவருடன் இருந்த ராஜேஷ் ஆகியோரை வரவழைத்து, மொத்தம் 15 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து, நிலத்தை பதிவு செய்வதற்காக, ராஜேஷ்வரி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு அதிர்ச்சி காத்திருந்தது.. ராஜேஸ்வரி தாக்கல் செய்த ஆவணங்கள் போலியானது என அதிகாரிகள் கூற, ஏமாந்ததை அறிந்த ராஜேஷ்வரி, காவல்துறையிடம் ரகசியமாக புகார் அளித்தார்.
பின்னர், பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு எதுவுமே தெரியாது போன்று இருந்த மோசடி கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், திலகா என்பவர், நில உரிமையாளர் ராஜம் போல் நடித்து, போலி ஆவணங்களைக் காட்டி, ராஜேஷ்வரியை ஏமாற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, 6 பேர் கொண்ட கும்பலை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், 15 லட்சம் ரூபாய் ரொக்கத்துடன் தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்… சரியான நேரத்தில் ரகசியமாக புகார் அளித்து, குற்றவாளிகளை பிடிக்க உதவியதாக ராஜேஷ்வரியை காவல்துறையினர் பாராட்டினர்..