கோடை விடுமுறையில் வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு காவல்துறை அறிவுரை

கோடை விடுமுறையில் குடும்பத்துடன் வெளியூர் செல்பவர்கள் கவனத்திற்கு காவல்துறை சில அறிவுரைகளை வழங்கியுள்ளது. வீடுகளில் கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இதனை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களது வீடுகளைப் பூட்டிவிட்டு வெளியூர் செல்லும்போது தங்களது பகுதியின் காவல் நிலையங்களில் தகவல் தெரிவிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும்பட்சத்தில், போலீஸார் அப்பகுதியில் கூடுதலாக கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுவர்.

வீட்டு வாசலில் நாளிதழ்களோ, பால் பாக்கெட்டுகளோ மொத்தமாக சேர்ந்து இருந்தால் வீட்டில் ஆள் இல்லை என்பதை திருடர்கள் எளிதாக கண்டுபிடித்து விடுவார்கள். இதனால் வெளியூர் செல்லும்போது அருகில் வசிப்போரிடம் தகவல் தெரிவித்து, நாளிதழ்கள் உள்ளிட்டவற்றை பெற்றுக்கொள்ள சொல்லவேண்டும்.

வணிக வளாகங்கள், கடைகள், வீடுகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்.

வீட்டில் விலையுயர்ந்த நகைகள் மற்றும் பணம் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

இரவில் வீடுகளின் முகப்பு விளக்குகளை எரிய விட வேண்டும்.

வெளியூர் செல்லும் முன்பாக குடியிருப்போர் நல சங்கங்களின் மூலம் காவலாளிகளை நியமிக்கலாம்.

காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கும் போது எப்போதும் தொடர்பு கொள்ள எதுவாக அலைபேசி எண்களை கொடுக்க வேண்டும்.

வீட்டில்ஆள் இல்லாத நேரத்தில் சுற்றுப்புறத்தை கவனித்துக்கொள்ளவோ அல்லது வீட்டை கவனித்துக் கொள்ளவோ பணியாளர்களை நியமித்தால் அவர்கள் குறித்த முழு விவரம் பெறாமல் நியமிக்க கூடாது.

அருகில் வசிப்போரிடம் நல்ல முறையில் நட்பு வைத்துக்கொண்டு ஆள் இல்லாத நேரத்தில் காலை மாலை இருவேளையும் வீட்டை கண்காணிக்க ஏற்பாடு செய்யலாம்.

Exit mobile version