புதிய கல்விக் கொள்கை தொடர்பான 2 நாள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பங்கேற்கவுள்ள பிரதமர் மோடி ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் இன்று உரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கை 2020க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அடுத்த ஆண்டே அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்த இரண்டு நாள் மாநாடு நேற்று தொடங்கியது. 2வது நாளாக இன்று தொடரும் இந்த மாநாட்டில், காணொலிக் காட்சி வாயிலாக பிரதமர் மோடி கலந்து கொண்டு ‘21ஆம் நூற்றாண்டில் பள்ளிக்கல்வி’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். கடந்த மாதம் 7ஆம் தேதி, புதிய கல்விக் கொள்கை தொடர்பான நிகழ்ச்சியில் உயர் கல்வியில் உருமாறும் சீர்திருத்தங்கள் என்ற தலைப்பில் பிரதமர் மோடி உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.